மதுரை மாவட்டம் அவனியாபுரத்தைச் சேர்ந்த முருகன் தாக்கல் செய்த மனுவில், "அவனியாபுரம் கிராமத்தில் தை மாதம் முதல் நாள் (ஜனவரி 15) நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா, கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம பொதுமக்கள் சார்பில் நடைபெற்று வரும் பாரம்பரிய நிகழ்ச்சி.
கடந்த 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்ற அனுமதிக்குப் பிறகு, 2018-ம் ஆண்டு தனிநபர் சங்கம் ஒன்று ஜல்லிக்கட்டு விழாவை நடத்தியது. இதற்கு எதிராக முன்பே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு விழாவை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என்றும், 16 பேர் கொண்ட ஆலோசனை குழுவுடன் போட்டி நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டதாக மனுவில் கூறப்பட்டது.
தற்போது வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவை, அனைத்து சமுதாய பிரதிநிதிகள் அடங்கிய கிராம பொது கமிட்டிக்கு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு, 'ஜல்லிக்கட்டு ஐ.பி.எல். போன்ற விளையாட்டு அல்ல. பல்வேறு போராட்டங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் பிறகே இதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
சில தனிநபர்கள் ஜல்லிக்கட்டை நடத்தியதாலேயே பல்வேறு சிக்கல்கள் உருவானது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு நடத்துவது தான் பொருத்தமானது' எனக் குறிப்பிட்டனர்.
மேலும், ஜனவரி 15-ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை, கிராம கமிட்டியே நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்கள் உலகப் புகழ்பெற்றவை என்பதால், இவ்விழாக்களை தனிநபர்கள் நடத்துவது ஏற்றதல்ல என்றும், அரசு நிர்வாகமே இப்போட்டிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உத்தரவு பிறப்பித்தனர்.
இந்தத் தீர்ப்பின் மூலம், ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் மற்றும் கண்காணிப்பில் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.


0 Comments