23வது காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 123 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பதக்கத்தை வேட்டையாடி வருகின்றனர்.
7வது நாளான நேற்று இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளிபதக்கம் கிடைத்தது. இந்தியாவின் மாற்றுத்திறனாளி தடகள வீரர் திலீப் மஹாது காவித் ஆண்களுக்கான 100 மீட்டர் டி47 ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
பந்தயத் தூரத்தை வெறும் 10.71 வினாடிகளில் கடந்து, புதிய காமன்வெல்த் சாதனையுடன் முதலிடத்தைப் பிடித்தார். இந்த வெற்றியின் மூலம், காமன்வெல்த் பாரா-தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் தடகள வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதே போட்டியில் மற்றொரு வீரரான முகமது பாசில் 10.83 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் முரளி சங்கர் 8.09 மீட்டர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் காமன்வெல்த் வரலாற்றில் நீளம் தாண்டுதல் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் பட்டியலில் 8வது இடத்தில் நீடிக்கிறது.


0 Comments