டெல்லியில் நடைபெற்ற விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், உலகின் நம்பர் 1 ஜோடியும் நடப்பு சாம்பியனுமான சீனாவின் லியு ஷெங் ஷு மற்றும் டான் நிங் இணையிடம் போராடி இந்திய ஜோடி தோல்வி கண்டது.
தரவரிசையில் இடம் பெறாத த்ரிசா-காயத்ரி ஜோடி, இப்போட்டியை மிகச் சிறப்பாகத் தொடங்கி முதல் கேமை தன்வசப்படுத்தியது.
எனினும், உலகின் முன்னணி சீன ஜோடிக்கு எதிராகத் தொடர்ந்து அழுத்தத்தைத் தக்கவைக்க முடியாமல் 21-18, 13-21, 8-21 என்ற புள்ளி கணக்கில் 1 மணிநேரம் 11 நிமிடங்களில் ஆட்டத்தை இழந்தது. இதன் மூலம் அவர்கள் வெண்கலப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
உலக சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா கடைசியாக 2011 இல் லண்டனில் பதக்கம் வென்றிருந்தது. அப்போது ஜ்வாலா குட்டா மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.
தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிசா - காயத்ரி ஜோடி வெண்கலம் வென்று சாதனை பெற்றுள்ளது. உலக சாம்பியன்ஷிப்பின் ஒவ்வொரு தொடரிலும் இந்தியா தொடர்ந்து பதக்கம் வெல்லும் வழக்கத்தையும் இந்த ஜோடி இதன் மூலம் காப்பாற்றியுள்ளது.


0 Comments