தமிழகம் முழுவதும் ரூ.93 கோடியில் 84 நவீன நெல் சேமிப்பு தளங்கள் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் / Chief Minister Stalin inaugurated 84 modern paddy storage sites across Tamil Nadu at a cost of Rs 93 crore
விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியாகும் நெல் மணிகள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து அவற்றை பாதுகாப்பாக சேமித்து வைக்க, 10 மாவட்டங்களின் 18 இடங்களில் மொத்தம் 2.86 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் ரூ.238.07 கோடியில் அமைக்க உத்தரவிடப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது 2-ம் கட்டமாக, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.93.03 கோடியில் 1.17 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட 84 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்புதளங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா புதுக்காடு கிராமத்தில் 750 டன் கொள்ளளவில் ரூ.2 கோடியில் தாலுகா செயல்முறை கிடங்கு கட்டப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக இவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 250 டன் நெல் சேமிக்கும் வகையில், தஞ்சாவூரில் 20, திருவாரூர்-10, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை - 14, திண்டுக்கல் - 9, புதுக்கோட்டை மற்றும் திருநெல்வேலி - 6, கடலூர் - 2, காஞ்சிபுரம் மற்றும்செங்கல்பட்டு - 2 என மொத்தம் 10 மாவட்டங்களில் ரூ.39.37 கோடியில் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டுவதற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
0 Comments