Recent Post

6/recent/ticker-posts

அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / Ambedkar Industrial Pioneer Scheme – launched by Chief Minister Stalin


முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, பன்னாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழா நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று அரசு விழாவாக நடைபெற்றது. விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்து, 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்' திட்டத்தை தொடங்கி வைத்தார். 

இத்திட்டத்தின்கீழ் முதல் 100 பயனாளிகளுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்துக்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் கொடூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் 262 ஏக்கர் பரப்பளவில் ரூ.153.22 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள 3 தொழிற்பேட்டைகளை தொடங்கி வைத்தார். 

குறுந்தொழில் குழும மேம்பாட்டு திட்டத்தின்கீழ், முதல் குறுந்தொழில் குழுமமாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமத்தை தொடங்கி வைத்தார்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கும் நோக்கிலான மெய்நிகர் கண்காட்சியகத்தையும் தொடங்கி வைத்தார். பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ் வெற்றி பெற்ற 10 மாணவ அணிகளின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.10 லட்சத்துக்கான பரிசுத் தொகையை வழங்கினார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அனைத்து தொழில் பிரிவுகளையும் உள்ளடக்கி ரூ.1,510 கோடி மதிப்பில் 7,400 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், கடன் வசதியாக்கல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புக்கான ஃபேம் டிஎன் (FaMe TN) அமைப்புக்கும், தொழில் முனைவோருக்கும் இடையே 100 புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.

மேலும், ஃபேம் டிஎன் (FaMe TN) - சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) இடையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விழாவில் ரூ.1,723 கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டன. இதன்மூலம் சுமார் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

இதுதவிர, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நிறுவனங்களுக்கு விருதுகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 

இந்த நிறுவனங்களுக்கு சிறப்பாக நிதிவசதி வழங்கிய வங்கிகளில் முதலிடத்துக்கான விருதை இந்தியன் வங்கிக்கும், 2-ம் இடத்துக்கான விருதை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், 3-ம் இடத்துக்கான விருதை பாங்க் ஆஃப் பரோடாவுக்கும் முதல்வர் வழங்கினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel