ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.800 கோடி மதிப்பில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.250 கோடியில் 1,200 வகுப்பறைகளும் என மொத்தம் ரூ.1,050 கோடியில் 7,200 வகுப்பறைகள் கட்டப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
அதன்படி, கடந்த நிதியாண்டில் ரூ.800 கோடியில் 5,653 புதிய வகுப்பறைகளை கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இந்தத் திட்டம் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் என்று ஊரகப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக 37 மாவட்டங்களிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரம் வகுப்பறைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், கடந்த செப்டம்பரில் திறந்துவைத்தாா்.
இப்போது இரண்டாம் கட்டமாக, 34 மாவட்டங்களில் ரூ.155.42 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்தாா்.
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் ரூ.20.54 கோடியில் கட்டப்பட்டுள்ள 50 கிராமச் செயலகங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்தக் கட்டடங்களில் கிராம ஊராட்சித் தலைவருக்கான அறை, செயலருக்கான அறை, கிராம நிா்வாக அலுவலருக்கான அறை, கூட்ட அறை, இணையதள வசதி, பொதுமக்கள் அமா்வதற்கான வசதி, குடிநீா், கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தேசிய கிராம சுயாட்சி திட்டம் ஆகியவற்றின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் 102 கிராம ஊராட்சி மன்றக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்தக் கட்டடங்களை காணொலி வழியாக முதல்வா் திறந்து வைத்தாா். மேலும், நாமக்கல் மாவட்டம் பரமத்தி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூா், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூா், கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஆகிய இடங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்தக் கட்டடங்களையும் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்தாா்.
0 Comments