கடந்த 2019ம் வருடம் ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக அறிவித்தது.
2019 ஆகஸ்ட் மாதம் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்க உள்ளது. மொத்தமாக 2 கோரிக்கைகளை முன் வைத்து இந்த வழக்கில் பல்வேறு மனுக்கள் போடப்பட்டன. ஒன்று சட்ட பிரிவு 370 ஐ நீக்கியது தவறு. இரண்டாவதாக ஒரு மாநில சட்டசபையின் அனுமதி இன்றி அதை பிரிப்பது, அதை யூனியன் பிரதேசம் ஆக்குவதும் தவறு.
இந்த இரண்டையும் மையமாக வைத்து பல்வேறு மனுக்கள் போடப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஆகஸ்ட் 2, 2023 முதல் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கத் தொடங்கியது. இந்த வழக்கை 16 நாட்களுக்கு விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் மாதம் 5ம் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இன்று இந்த வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில், மொத்தமாக இந்த வழக்கில் 3 தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. தலைமை நீதிபதி சந்திரசூட் தன்னுடைய தீர்ப்பு, நீதிபதிகள் ஜே கவாய், சூர்யா காந்த் தீர்ப்பை ஒன்றாக வழங்குகிறார்.
நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் , நீதிபதி சஞ்சீவ் கண்ணா தனி தனியாக தீர்ப்பு வழங்கி உள்ளனர். ஆனால் இவர்கள் இருவருமே மற்ற 3 நீதிபதிகளின் தீர்ப்புடன் ஒத்துப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது சட்டப்படி செல்லும். சட்டப்பிரிவு 370 ஒரு தற்காலிக ஏற்பாடு என்று நாங்கள் கருதுகிறோம்.
370 சட்டப்பிரிவு மாநிலத்தில் போர் நிலைமைகள் காரணமாக ஒரு இடைக்கால ஏற்பாடாக இருந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒரு விதி, அதிகார வரம்புகள் உள்ளன. அவர்கள் பயன்படுத்தக்கூடிய அளவிற்கான அதிகார வரம்புகள் உள்ளன. ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு தனி "இறையாண்மை" என்பது கிடையாது.
குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு இருக்கும் போது ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் 370வது பிரிவை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதல் தேவை இல்லை மாநில அரசை கேட்காமல் அவர்களின் அதிகாரத்தை நீக்கியதால் இனி மாநில அரசுகளின் அதிகாரத்தை நீக்க, அவர்களை யூனியன் பிரதேசமாக மாற்ற, மாநில அந்தஸ்தை நீக்க மத்திய அரசு சட்டசபை அனுமதியை கேட்க வேண்டியது இல்லை என்ற நிலை ஏற்படுகிறது.
ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும் ஜம்மு காஷ்மீருக்கு விரைந்து மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கி, 2024 செப்டம்பருக்குள் அங்கு தேர்தல் நடத்த வேண்டும். லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும்.
0 Comments