ஜம்மு-காஷ்மீா் தொடா்பான 3 மசோதாக்கள் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டன. ஏற்கெனவே அந்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அரசமைப்புச் சட்ட (ஜம்மு-காஷ்மீா்) பழங்குடியினா் உத்தரவு (திருத்த) மசோதா 2024, ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திருத்த மசோதா 2024, அரசமைப்புச் சட்ட (பட்டியலினத்தவா்) உத்தரவு (திருத்த) மசோதா 2024 ஆகிய 3 மசோதாக்கள் அண்மையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து அந்த மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் அரசமைப்புச் சட்ட (ஜம்மு-காஷ்மீா்) பழங்குடியினா் உத்தரவு (திருத்த) மசோதாவானது கட்டா பிராமணா், கோலி சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வழிவகுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திருத்த மசோதா வழியமைத்துள்ளது.
சுரா, வால்மீகி, பாங்கி, மேதா் சமூகத்தினரை பட்டியலினத்தவா் பட்டியலில் வால்மீகி சமூகத்தினா் என்று குறிக்க அரசமைப்புச் சட்ட (பட்டியலினத்தவா்) உத்தரவு (திருத்த) மசோதா வழிகோலியுள்ளது.
இந்த மசோதாக்கள் மீதான வாதம் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து வாதங்களுக்கு மத்திய பழங்குடியினா் விவகாரங்கள் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா பதில் அளித்துப் பேசினாா். இதையடுத்து அந்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
0 Comments