மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த போது, மாநிலங்களுக்கான வரி பகிர்வாக இந்த நிதி ஆண்டில், 12 லட்சத்து 19 ஆயிரத்து 783 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான வரி பகிர்வாக ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 750 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு 25,069 கோடி ரூபாயும், பிகார் மாநிலத்திற்கு 14,056 கோடி ரூபாயையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மத்தியப்பிரதேசத்திற்கு 10,970 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்திற்கு 10,513 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு 5,700 கோடி ரூபாயை வரி பகிர்வாக மத்திய அரசு அளித்துள்ளது.
இதே போல, ஆந்திராவுக்கு 5,655 கோடி ரூபாயும், குஜராத்திற்கு 4,860 கோடி ரூபாயும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
தற்போது விடுவிக்கப்பட்டுள்ள தொகையுடன் சேர்த்து, இந்த நிதியாண்டில் இதுவரை 2 லட்சத்து 79 ஆயிரத்து 500 கோடி ரூபாயை வரிபகிர்வு தொகையாக அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 Comments