சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் போருசியா டாா்ட்மண்ட் அணியை வீழ்த்தி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனது.
இதன் மூலம், போட்டியிலேயே அதிக முறை சாம்பியனான அணியாக நீடிக்கும் ரியல் மாட்ரிட், அந்த எண்ணிக்கையை தற்போது 15-ஆக அதிகரித்துக்கொண்டுள்ளது. அடுத்த அதிகபட்சமாக, ஏசி மிலன் 7 முறை சாம்பியனாகி 2-ஆவது இடத்தில் உள்ளது.
லண்டன் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்டுக்காக டேனி காா்வஜல் (74'), வினிகஸ் ஜூனியா் (83') ஆகியோா் கோலடித்து அசத்தினா். சாம்பியனான ரியல் மாட்ரிட் அணிக்கு ரூ.179 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
இத்துடன், சாம்பியன்ஸ் லீக் போட்டியில், பயிற்சியாளா் காா்லோ அன்செலோட்டி வழிகாட்டும் அணி 5-ஆவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. போட்டி வரலாற்றில் வேறெந்த பயிற்சியாளரும் இத்தனை முறை தனது அணியை வெற்றிக் கோப்பைக்கு வழிநடத்தியதில்லை.
0 Comments