Recent Post

6/recent/ticker-posts

இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க வெற்றி / Anura Kumara Dissanayake wins Sri Lankan presidential election

இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க வெற்றி / Anura Kumara Dissanayake wins Sri Lankan presidential election

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று (21ம் தேதி) நடந்த நிலையில், நேற்று இரவு முதலே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விடிய விடிய வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸநாயக்க முன்னிலையில் இருந்தார்.

தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த அவர், பின்னர் சரிவை சந்தித்து 39.65% வாக்குகள் மட்டுமே பெற்றார். இரண்டாவது இடத்தில் இருந்த சஜித் பிரேமதாசவுக்கு 34.09% வாக்குகளும், மூன்றாவது இடத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 17.47% வாக்குகளும் கிடைத்தன.

இலங்கைத் தமிழர்களின் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு 4ஆம் இடம் கிடைத்த நிலையில், முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே 3 சதவீத வாக்குகளை கூட பெறாமல் 5ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்த முடிவுகளில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை தாண்டவில்லை. இதனால் 2 ஆவது விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்களிக்கும் போதே முதல், இரண்டு மற்றும் 3ஆவது விருப்ப வேட்பாளர்களை மக்கள் தேர்வு செய்வார்கள். 

வேட்பாளர்கள் யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காவிடில் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்தவர்கள் யாருக்கு 2ஆவது அதிக விருப்பம் தெரிவித்துள்ளார்களோ அந்த வாக்குகள் அவர்கள் கணக்கில் சேர்க்கப்படும்.

இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் இரண்டாவது விருப்பு வாக்கை எண்ணுவது இதுவே முதல்முறையாகும். இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ணும் நடைமுறையின்படி, முதல் 2 இடங்களில் உள்ள அநுர குமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் ரத்னநாயக்க அறிவித்தார்.

இதன்படி, 2வது விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதன் மூலம், 2வது விருப்ப வாக்கு எண்ணிக்கையில், 9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் இலங்கையின் அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel