மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் திடீர் ராஜினாமா / Manipur Chief Minister Biren Singh resigns suddenly

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர்.

இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின.

சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர்.

இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த வன்முறை, இன்றளவும் முடிவுக்கு வரவில்லை.

இதற்கிடையே, மணிப்பூரில் நடந்த கலவரங்களுக்கு மாநில முதல்வரே காரணம் எனக் கூறி, சில ஆடியோக்கள் வெளியாகின. குக்கி இன மாணவர் அமைப்பு, இந்த ஆடியோ ஆதாரங்களை இரண்டு கட்டங்களாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. 

இதற்கு மணிப்பூர் அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. ஆயினும் இதற்காக முதலமைச்சர் பதவியிலிருந்து பிரேன் சிங் விலக வேண்டுமென்று கடுமையான வலியுறுத்தல்களும் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஆளுநரை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை பிரேன் சிங் அளித்துள்ளார். 

ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என காங்கிரஸ் கட்சி கூறியிருந்த நிலையில் இம்முடிவை பிரேன் சிங் எடுத்துள்ளார்.