பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டமாக வனாஸ் - சந்தானி சௌக் (வழித்தடம் 2ஏ), ராம்வாடி – வாகோலி / விட்டல்வாடி (வழித்தடம் 2பி) ஆகியவற்றுக்கும் முதலாவது கட்டத்தின் கீழ் தற்போதுள்ள வனாஸ் - ராம்வாடி வழித்தடத்தின் நீட்டிப்புப் பணிகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த இரண்டு உயர்மட்ட வழித்தடங்களும் 12.75 கி.மீ நீளமும் 13 நிலையங்களையும் உள்ளடக்கியது. சந்தானி சௌக், பவ்தான், கோத்ருட், காரடி, வாகோலி போன்ற விரைவான முன்னேற்றம் கண்டு வரும் புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தப் பணிகளை நான்கு ஆண்டுகளுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான திட்ட செலவு ரூ.3626.24 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசு, மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணி தற்போதுள்ள 2-வது வழித்தடத்தின் நீட்டிப்பாகும். மேலும் புனேயில் கிழக்கு-மேற்கு இடையே மக்களின் ரயில் பயணத்தை மேம்படுத்தும் வகையில் சந்தானி சௌக் - வாகோலி வரையிலான விரிவாக்கத் திட்டமும் அடங்கும்.
0 Comments