இமாச்சலப் பிரதேசத்தில் 2023-ம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளம், நிலச்சரிவு, பெருமழை சம்பவங்களுக்குப் பிறகு மீட்பு, மறுசீரமைப்புத் திட்டத்திற்காக மத்திய அரசின் உதவியாக ரூ. 2006.40 கோடி வழங்குவதற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் மற்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு, தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நிதி தொகுப்பிலிருந்து அம்மாநிலத்திற்கு நிதி உதவி வழங்குவதற்கான பரிந்துரையை அளித்தது.
2023-ம் ஆண்டு பருவமழையின் போது வெள்ளம், பெருமழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக ஏற்பட்ட சேதம் மற்றும் பேரழிவு காரணமாக மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலத்திற்கு உதவும் வகையில், இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.2006.40 கோடி மீட்புத் திட்டத்தை உயர்மட்டக் குழு அங்கீகரித்துள்ளது.
இதில், ரூ.1504.80 கோடி தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நிதி தொகுப்பிலிருந்து மத்திய அரசின் பங்களிப்பாக வழங்கப்படும்.
முன்னதாக, 2023 டிசம்பர் 12, அன்று, இந்த பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.633.73 கோடி கூடுதல் நிதி உதவி வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
2024-25-ம் நிதியாண்டில், மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியையும், தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியையும் மத்திய அரசு விடுவித்துள்ளது.
அத்துடன், 19 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் குறைப்பு நிதியிலிருந்து ரூ.4984.25 கோடியையும், 8 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் குறைப்பு நிதியிலிருந்து ரூ.719.72 கோடியையும் மத்திய அரசு விடுவித்துள்ளது.
0 Comments