ஐ.நா.வின் 6 முக்கிய அமைப்புகளில் பொருளாதார-சமூக கவுன்சிலும் ஒன்றாக உள்ளது. பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.
சா்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளையும் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. ஐ.நா. சாா்பில் நடைபெறும் மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதையும் கவுன்சில் கண்காணிக்கும்.
ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலில் 54 நாடுகள் உறுப்பினா்களாக இடம்பெற முடியும். பிராந்திய ரீதியாக நாடுகள் 3 ஆண்டு காலத்துக்குத் தோ்ந்தெடுக்கப்படும்
ஆசிய கண்டத்தில் இருந்து 11 நாடுகளும், ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து 14 நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் இருந்து 6 நாடுகளும், தென் அமெரிக்க கண்டத்திலிருந்து 10 நாடுகளும், மற்ற பகுதிகளில் இருந்து 13 நாடுகளும் கவுன்சிலின் உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்படும்.
இந்நிலையில், 2026-28 ஆண்டுக்கான ஐ.நா. பொருளாதார- சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு பதவி காலம் இருக்கும்.
கடைசியாக 2008 முதல் 2020 வரை 4 முறை இந்த கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றிருந்தது. தற்போது 18 ஆவது முறையாக இந்த கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளது.
பொருளாதார மற்றும் சமூக பிரச்னைகள் தொடர்பான கொள்கைகளை பரிந்துரைப்பதில் ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முக்கிய அமைப்பாக கருதப்படுகிறது.
0 Comments