இந்தியா, 1998-ம் ஆண்டு முதல் சர்வதேச நிர்வாக அறிவியல் நிறுவனத்தின் உறுப்பினராக உள்ளது. சர்வதேச நிர்வாக அறிவியல் நிறுவனம் என்பது, 31 உறுப்பு நாடுகள், 20 தேசிய பிரிவுகள், பொது நிர்வாகம் குறித்த அறிவியல் ஆராய்ச்சிக்காக கூட்டாக ஒத்துழைக்கும் 15 கல்வி ஆராய்ச்சி மையங்கள் ஆகியவை இணைந்த ஒரு கூட்டமைப்பாகும்.
முக்கிய உறுப்பு நாடுகளில் இந்தியா, ஜப்பான், சீனா, ஜெர்மனி, இத்தாலி, கொரியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, மெக்சிகோ, ஸ்பெயின், கத்தார், மொராக்கோ, இந்தோனேசியா போன்றவை அடங்கும்.
ஐஐஏஎஸ் எனப்படும் சர்வதேச நிர்வாக அறிவியல் நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபையுடன் நெருக்கமான பணி உறவைப் பேணி வருகிறது. ஐஐஏஎஸ் ஐநா-வில் முறையாக இணைக்கப்பட்ட அமைப்பாக இல்லாவிட்டாலும், பொது நிர்வாகத்தில் ஐநா-வின் பணிகளில் தீவிரமாக பங்கேற்றுள்ளது.
2025-2028-ம் ஆண்டு காலகட்டத்தில் ஐஐஏஎஸ் தலைமைப் பதவிக்கு, இந்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் துறை செயலாளர் திரு வி. ஸ்ரீனிவாசின் பெயரை பிரதமர் திரு நரேந்திர மோடி பரிந்துரைத்தார்.
தலைமைப் பதவிக்கான தேர்வு நடைமுறை பிப்ரவரி 2025-ல் நடைபெற்றது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரியா, பஹ்ரைன் ஆகிய நாடுகள் ஐஐஏஎஸ் நிர்வாக கவுன்சிலின் தேர்வு நடைமுறைகளில் பங்கேற்றன.
அதைத் தொடர்ந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளின் வேட்புமனுக்கள் அடுத்த சுற்று தேர்வுக்காக ஐஐஏஎஸ்-சின் பொதுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.
தென்னாப்பிரிக்கா மே 2025-ல் இந்தியாவுக்கு ஆதரவாக தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றது. 2025 ஜூன் 3 அன்று இந்தியாவிற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையே நடைபெற்ற தேர்தலில் 141 வாக்குகள் பதிவாயின.
அதில் இந்தியா 87 வாக்குகளைப் (61.7 சதவீத வாக்குகளைப்) பெற்று பரவலான ஆதரவுடன் வெற்றி பெற்றது. ஆஸ்திரியா 54 வாக்குகளைப் (38.3 சதவீத வாக்குகளைப்) பெற்று தோல்வி அடைந்தது.
0 Comments