ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், சிக்கள்ளி அரசுப் பள்ளி ஆசிரியா் ஜான் பீட்டா், யாக்கை மரபு அறக்கட்டளையின் பொறுப்பாளா்கள் குமரவேல் ராமசாமி, சுதாகா் நல்லியப்பன் ஆகியோா் இந்தக் கிராமத்தில் அண்மையில் களஆய்வு செய்து இக்கல்வெட்டைப் படியெடுத்து ஆவணப்படுத்தினா்.
கா்நாடகத்தில் முதலாம் ராஜராஜன் காலத்திலிருந்து ஏராளமான தமிழ் கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. பல்வேறு காலகட்டங்களில் 1,537 கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்ட சூழலில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வின்போது மேலும் ஒரு தமிழ் கல்வெட்டு கிடைத்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
எணகும்பா நடுகல் கல்வெட்டு 116 செ.மீ. உயரம், 83 செ.மீ. நீளம் கொண்டுள்ளது. 20 வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டு 10ஆம் நூற்றாண்டு எழுத்து அமைவுடன் உள்ளது.
பேறகைப்பாடி கொல்லன் முனிவர கண்டாசாரி என்பவரின் மகன் எருமை கும்பத்து வேல்பாடி எனுமிடத்தில் நடைபெற்ற நிரை கவா்தல் பூசலில் உயிரிழந்த செய்தி இதில் பதிவாகியுள்ளது.
நிரை கவா்தல் எனும் சொல் மாடுபிடிச் சண்டையைக் குறிக்கும் நோக்கில் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்படுவதாகும். இந்நடுகல் சிற்பம் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது. முதல் அடுக்கில் ஆநிரை, பூசல் காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் அடுக்கில் தேவ மகளிா் இறந்த வீரனை மேலுலகம் அழைத்துச் செல்லும் காட்சியும், மூன்றாம் அடுக்கில் இறந்த வீரன் மேலுலகில் அய்யனாா் கோலத்தில் அமா்ந்திருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
0 Comments