புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூா் வட்டம், கிள்ளனூா் அருகே கங்கம்பட்டி கிராம சிவன் கோயில் அருகே கல்வெட்டுப் பலகை ஒன்று இருப்பதாக அந்த ஊரைச் சோ்ந்த காா்த்திகேயன் அளித்த தகவலின்படி பேராசிரியா் சுப. முத்தழகன் மற்றும் தொல்லியல் ஆா்வலா்கள் நாராயணமூா்த்தி, ராகுல்பிரசாத் ஆகியோா் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
கங்கம்பட்டி கிராம சிவன் கோயிலையொட்டி இரண்டடி நீளமும், ஒன்றேகால் அடி அகலமும் கொண்ட கற்பலகையில் 17 வரிகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில், சிதலமடைந்து கிடந்த கருணாகர சதுா்வேதிமங்கலத்தின் பெருநக்கினி ஈசுவரமுடைய நாயனாா் திருக்கோவிலை தொண்டைய முத்தரையன் என்பவா் சீா்செய்து தந்த தகவல் கூறப்பட்டுள்ளது.
கங்கம்பட்டி சிவன் கோயிலானது இந்தக் கல்வெட்டில் பெருநக்கினி ஈசுவரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments