மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் கீழ் உள்ள மீன்வளத் துறையும், மாலத்தீவின் மீன்வளம் மற்றும் பெருங்கடல் வள அமைச்சகமும் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூலை 25, 2025 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியின் அரசு முறைப் பயணத்தின் போது இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.
சூறை மீன் வளர்ப்பு மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவித்தல், மீன்வளர்ப்பு மற்றும் நிலையான வள மேலாண்மையை வலுப்படுத்துதல், மீன்வளம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலாவை வளர்ப்பது மற்றும் இரு நாடுகளிலும் புதிய மற்றும் அறிவியல் சார் ஆராய்ச்சியை ஆதரிப்பதே இந்த ஒத்துழைப்பின் நோக்கமாகும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள முக்கிய ஒத்துழைப்புத் துறைகளில் மதிப்புச் சங்கிலித் தொடர் மேம்பாடு, கடல் வளர்ப்பு முன்னேற்றம், வர்த்தக வசதி மற்றும் மீன்வளத் துறையில் திறன் மேம்பாடு ஆகியவை அடங்கும். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, குளிர்பதன சேமிப்பு உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலமும், குஞ்சு பொரிப்பு மேம்பாடு, மேம்பட்ட உற்பத்தி திறன் மற்றும் வளர்ப்பு இனங்களின் பல்வகைப்படுத்தல் மூலம் மீன்வளர்ப்புத் துறையை வலுப்படுத்துவதன் மூலமும் மாலத்தீவுகள் அதன் மீன் பதப்படுத்தும் திறன்களை அதிகரிக்கும்.
0 Comments