பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் கயாவில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற திட்டங்களையும் இன்று தொடங்கி வைத்தார்.
போக்குவரத்துக்கான இணைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி, கங்கை நதியின் மேல் தேசிய நெடுஞ்சாலை எண் 31-ல் 1.86 கிலோ மீட்டர் நீள 6 வழிச்சாலையை உள்ளடக்கிய, 1,870 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 8.15 கிலோ மீட்டர் நீளமுள்ள அவுண்டா – சிமாரியா மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
பக்தியர்பூர் – மொகாமா இடையே, தேசிய நெடுஞ்சாலை 31-ல் 1,900 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இந்தச் சாலை இப்பகுதிகளுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதுடன் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புதிய பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கவும் உதவிடும்.
பீகாரில் மின்சாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் வகையில், 6,880 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பக்சர் அனல்மின் நிலையத்தை (660 மெகாவாட்) பிரதமர் தொடங்கி வைத்தார்.
தூய்மை இந்தியா இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வை, கங்கை நதியில், தூய்மையைப் பராமரிப்பது, தண்ணீர் தடையின்றி செல்வதை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களுடன், அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், 520 கோடி ரூபாய் செலவில், தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கழிவுநீர்ப் பாதை கட்டமைப்பையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
1,260 கோடி ரூபாய் செலவிலான நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அவுரங்காபாதில் தௌட்நகர் மற்றும் ஜெகன்னாபாதில் கழிவுநீர் கட்டமைப்புப் பணிகளும் அடங்கும்.
ஜமுய் மற்றும் லக்சிசராயில் உள்ள பராகியாவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கழிவுநீர் மாற்றுப்பதை அமைக்கும் திட்டமும் இதில் அடங்கும்.
0 Comments