பீகாரில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக தேர்தல் ஆணையம் அங்குச் சார் எனப்படும் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. இதற்கு எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தன.
இதற்கு முன்பு சார் நடவடிக்கை தொடர்பாக நடந்த விசாரணையில், நீக்கப்பட்டோரின் விவரங்களைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடும்படி உத்தரவிடப்பட்டது. இந்தச் சூழலில் தான் இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், தங்கள் வசிப்பிடச் சான்றாக ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
தேர்தல் ஆணையம் ஏற்கனவே உள்ள 11 ஆவணங்களுடன் ஆதார் அட்டையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்பட்டோரையும் சேர்க்கத் தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பீகார் அரசியல் கட்சிகள் மீது நீதிமன்றம் கடுமையான கருத்துகளை முன்வைத்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் கடமைகளைச் செய்வதில்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம், 65 லட்சத்துக்கும் அதிகமான நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு ஏன் எந்தவொரு அரசியல் கட்சியும் உதவவில்லை என்று கேள்வி எழுப்பியது.
வரைவு வாக்காளர் பட்டியலில் தனிப்பட்ட முறையில் சில எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மட்டுமே ஆட்சேபணைகளைத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் கட்சியாக எந்தவொரு கட்சியும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதைச்சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "உங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் என்ன செய்கிறார்கள்? அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு உதவ வேண்டும்" என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
0 Comments