முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்களின் நலனுக்காக 5.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 47 பணியாளர் குடியிருப்புகள் கொண்ட இந்தியாவின் இரண்டாவது யானை பாகன் கிராமத்தை திறந்து வைத்தார்.
மேலும், யானைகளை பராமரிக்கும் காவடி பணியிடங்களுக்கு 6 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காட்டில் இந்தியாவின் முதல் யானை பாகன் கிராமம் 13.5.2025 அன்று முதல்வரால் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, யானைகளின் பராமரிப்பு மற்றும் தோழமைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பாகன்கள் மற்றும் காவடிகளின் தன்னலமற்ற சேவை அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பழமையான யானை முகாமில் ஒன்றான கோழிக்கமுத்தி யானைகள் முகாம், யானை மேலாண்மையில் பல தலைமுறைகளாக பாரம்பரிய அறிவைப் பெற்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த யானைப் பாகன்களின் இருப்பிடமாகும்.
இந்த முகாமில் தற்போது 24 யானைகள் உள்ளன. முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இம்முகாம்களில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக யானைகளைப் பார்க்கும் காட்சியகம் மற்றும் பார்வையாளர் நடைபாதை போன்ற நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.


0 Comments