பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பிகாரில் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரூ. 62 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தில்லியின் விக்ஞன் பவனிலிருந்து காணொளி வாயிலாகப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
இதன்மூலம் 2000 ஐடிஐக்களை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, பிகாரில் உள்ள பாட்னா, தர்பங்காவில் உள்ள ஐடிஐக்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.
பிகாரில் புதுப்பிக்கப்பட்ட 'முக்கியமந்திரி நிச்சய ஸ்வயம் சஹாயத பட்டா யோஜனா' திட்டத்தை மோடி தொடங்கிவைத்தார், இதன் கீழ் 5 லட்சம் பட்டதாரிகள் இலவச திறன் பயிற்சியுடன் இரண்டு ஆண்டுகளுக்கு தலா ரூ. 1,000 மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவார்கள்.
மேலும் பிகாரில் மாணவர் கல்வி கடன் அட்டை திட்டத்தையும் அவர் தொடங்கினார். இதன்மூலம் ரூ. 4 லட்சம் வரை வட்டியில்லா கல்விக் கடன்கள் வழங்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ் 3.92 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஏற்கெனவே ரூ.7,880 கோடிக்கும் அதிகமான கடன்களைப் பெற்றுள்ளனர். அதோடு, யுவ ஆயோக் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
பிகாரில் ஜன நாயக் கர்பூரி தாக்கூர் திறன் பல்கலைக்கழகத்தையும் திறந்து வைத்தார், இது உலகளாவிய அளவில் போட்டித்தன்மை வாய்ந்த பணியாளர்களை உருவாக்கத் தொழில் சார்ந்த படிப்புகள் மற்றும் தொழிற்கல்வியை வழங்குவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது.


0 Comments