நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் வாய்ப்புகள் குறித்த தேசிய அளவிலான மாநாட்டை 2025 அக்டோபர் 07 அன்று புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு உற்பத்தி துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தற்சார்பை அடைய வேண்டும் என்ற தேசிய அளவிலான இலக்குடன் பிராந்திய தொழில்துறை கொள்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை இணைக்கும் நோக்கத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தளமாக திகழும்.
இம்மாநாட்டின் போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அங்கீகாரங்களை வழங்கும் செயல்முறையை நெறிப்படுத்த வடிவமைக்கப்பட்ட புதிய 'பாதுகாப்பு ஏற்றுமதி, இறக்குமதி தளத்தை' பாதுகாப்பு அமைச்சர் தொடங்கிவைக்கிறார்.
அத்துடன் இந்திய பாதுகாப்புத் தளவாடத் தொழில்துறைகளின் திறன்கள் மற்றும் தயாரிப்புகளை வரைபடமாக்கும் டிஜிட்டல் தொகுப்பான ஸ்ரீஜன் டீப் (பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர் தளம்) இணையதளத்தையும் தொடங்கிவைக்கவுள்ளார்.
'மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை கொள்கை தொகுப்பு' மற்றும் 'புதுமை கண்டுபிடிப்புகளின் பகிரப்பட்ட பகுதிகள்' என்ற பாதுகாப்பு திறனுக்கான புதுமை கண்டுபிடிப்புகள் (ஐடெக்ஸ்) குறித்த தகவல் கையேடும் இந்த மாநாட்டில் வெளியிடப்படவுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் தங்களுடைய முக்கிய பங்களிப்பு குறித்து விவாதிக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழில்துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளை ஒருங்கிணைப்பதே இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கும், பாதுகாப்பு தளவாட ஏற்றுமதிகளை மேம்படுத்துவதற்கும், இத்துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளையும் இம்மாநாடு விளக்கும்.


0 Comments