2 நாள் அரசுமுறை பயணமாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகை தந்தார். டெல்லியில் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், இரு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சு நடத்தினர்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையே, துறைமுகம், கப்பல் போக்குவரத்து தொடர்பாகவும், உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, அறிவியல் தொடர்பாகவும், இந்தியா- ரஷ்யா இடையே பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரஷ்ய குடிமக்களுக்கு இந்தியா விரைவில் இலவச 30 நாள் இ-சுற்றுலா விசா மற்றும் 30 நாள் குழு சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்தும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
சர்வதேச பிக் கேட் கூட்டணியில் இணைவதற்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள ரஷ்ய தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.
முன்னதாக, பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய புதினை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்று, தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில், ரஷ்ய அதிபர் புடினுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று காலை ஜனாதிபதி மாளிகையில், ரஷ்ய அதிபர் புதினுக்கு முறைப்படி, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
புதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின் அங்கிருந்து டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு சென்ற புடின், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்தியா - ரஷ்யா இடையே கடந்த 80 ஆண்டுகளாக ஆழமான நட்புறவு நீடித்து வருகிறது. இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், பல்வேறு ஒப்பந்தங்களை இறுதி செய்யவும், ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா - ரஷ்யா உச்சி மாநாடு நடக்கிறது.
அதன்படி நேற்று நடந்த 23வது உச்சி மாநாடு நிறைவடைந்த பின், ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்திலும் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொண்டார். அதன்பின் 9 மணிக்கு புறப்பட்டு மீண்டும் மாஸ்கோ சென்றார்.


0 Comments