குறைக்கடத்தி உற்பத்தி முதல் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு வரை சிலிக்காண் அடுக்கைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ள நம்பகமான நாடுகளின் கூட்டமைப்பாக பாக்ஸ் சிலிக்கா கருதப்படுகிறது.
அமெரிக்கா தலைமையிலான இந்த கூட்டமைப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் வெளிப்படையானதாகவும், ஜனநாயக சமூகங்களால் நிர்வகிக்கப்படுவதாகவும் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த கூட்டமைப்பில் இந்தியா இன்று முறைப்படி இணைந்தது. டெல்லியில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் இந்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி, சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் ஜேக்கப் ஹெல்பெர்க், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்டோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
இந்த கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, கிரீஸ், இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா, கத்தார், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
அதேநேரத்தில், கனடா, நெதர்லாந்து, ஐரோப்பிய யூனியன், தைவான் ஆகிய நாடுகள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments