இந்திய கடற்படை தனது போர்க்கப்பல் திறனை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எதிரி நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட அதிநவீன போர்க்கப்பலான ஐஎன்எஸ் அஞ்சதீப், சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு 'ஷாலோ வாட்டர்' போர்க்கப்பல்களில் இதுவும் ஒன்றாகும். சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம், 80 சதவீத உள்நாட்டு பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பல், ஆழம் குறைந்த கடலோரப் பகுதிகளில் மறைந்து செயல்படும் எதிரி நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிக்கும் திறன் பெற்றது.
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் நிறுவனம் கட்டிய இந்த கப்பல், கடலோர மற்றும் ஆழமற்ற கடல் சூழல்களில் செயல்படுவதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ.780 கோடி செலவில் உருவான இந்த போர்க்கப்பல், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலம் மற்றும் நீண்ட கடற்கரை பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 77 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல், அதிவேக நீர்-ஜெட் உந்துவிசை அமைப்புடன் 25 நாட்டிகல் வேகத்தில் பயணிக்கக் கூடியது. அதிநவீன சோனார் அமைப்புகள், இலகுரக டார்பிடோக்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள் மற்றும் மேம்பட்ட போர்முறை மேலாண்மை அமைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த கப்பல்கள் ரோந்து, கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் திறன் கொண்டதாகும்.


0 Comments