'NIRYAT' தரவுகளின் அடிப்படையில் வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2024-25ம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 7,997.17 மில்லியன் டாலர்களாகப் பதிவாகி, இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் நெருங்க முடியாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் 2020-2021ம் ஆண்டில் 6,193.39 மில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்த தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் அபரிமிதமான எழுச்சியைக் கண்டுள்ளது.
அரசின் சார்பாக திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட ஜவுளி மையங்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகைகள் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த நடவடிக்கைகளால், ஏற்றுமதி முந்தைய ஆண்டுகளை விட 29 சதவீதம் என்ற பிரம்மாண்ட வளர்ச்சியைப் பதிவு செய்து 7,997.17 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
தொழில் வளர்ச்சியில் தங்களை முன்னணி மாநிலங்களாகக் காட்டிக் கொள்ளும் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தனது சிறப்பான செயல்பாடுகளால் வெகுவாகப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இப்பட்டியலில், தமிழ்நாடு – 7,997.17 மில்லியன் டாலர்கள் (முதலிடம்)
குஜராத் – 5,646.01 மில்லியன் டாலர்கள் (இரண்டாம் இடம்)
மகாராஷ்டிரா – 3,831.28 மில்லியன் டாலர்கள் (மூன்றாம் இடம்)
உத்தரப் பிரதேசம் – 3,679.5 மில்லியன் டாலர்கள் (நான்காம் இடம்) என உள்ளன.
குஜராத்தை விட தமிழ்நாடு சுமார் 2,351 மில்லியன் டாலர்கள் அளவுக்குக் கூடுதலாக ஏற்றுமதி செய்து, இந்தியாவின் ஜவுளித் தலைநகரம் தமிழ்நாடுதான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.
பிற மாநிலங்களின் நிலையை பொறுத்தவரை மத்தியப் பிரதேசம் (1,324.97), மேற்கு வங்கம் (921.95), ராஜஸ்தான் (855.37) போன்ற மாநிலங்கள் பல மடங்கு பின்தங்கியுள்ளன.
தென்னிந்தியாவில் ஆந்திரா (506.42), கேரளா (434.14), தெலங்கானா (111.09) ஆகிய மாநிலங்களை விட தமிழ்நாடு மிகப்பெரிய ஜாம்பவானாகத் திகழ்கிறது.
''எளிதான தொழில் தொடங்கும் சூழல்", உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஈர்க்கப்பட்ட பல்லாயிரம் கோடி முதலீடுகள், புதிய மினி ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கும் திட்டம் போன்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முன்னெடுப்புகளே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளன.


0 Comments