நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதிகள் மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச தொகுதி மறுவரையறை மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் நேற்று ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்தது.
தொகுதி மறுவரை மசோதாவின்படி, தற்போதுள்ள 543 மக்களவை இடங்களை 50% அதிகரித்து, மொத்தம் 816 இடங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 33% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 273 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்படும்.
இந்த சூழலில் தான், நேற்று தாக்கல் செய்யப்பட்ட 3 மசோதாக்களுக்கான விவாதம் மக்களவையில் நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்த நிலையில், அந்த விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது.
இன்றைய விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி பிரியாங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்வதற்கு, 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றது. இந்த மசோதா வெற்றிபெற 3ல் 2 பங்கு அதாவது 326 எம்.பி-களின் ஆதரவு தேவை.
இந்த நிலையில் தான், இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 489 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். அதில், 278 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 211 உறுப்பினர் மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தனர்.
இதனால், மசோதா நிறைவேறுவதற்கான பெரும்பான்மை எண்ணிக்கை கிடைக்கப்படவில்லை. இந்த சூழலில், கடந்த சில வாரங்களாக இந்திய அளவில் பேசுபொருளாகியிருந்த தொகுதி வரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்திருக்கிறது. இது ஆளும் பாஜக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


0 Comments