மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,42,702 கோடி ஆக உள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 8.7 சதவீதம் அதிகமாகும். திருப்பி அளிக்கப்பட்ட தொகைகள் போக, நிகர ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2,10,909 கோடி ஆகும். இது கடந்த ஆண்டை விட 7.3 சதவீதம் அதிகம்.
உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் அதிகரித்ததும், வரி ஏய்ப்புகள் தடுக்கப்பட்டதும் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
மாநிலங்களுக்கான வரிப் பங்கீட்டில் தமிழகத்திற்கு இந்த முறை மிகப்பெரிய பலன் கிடைத்துள்ளது. ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி வரிகளில் இருந்து தமிழகத்தின் பங்காக 8,413 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட தொகையை விட 46 சதவீதம் அதிகமாகும். மாநிலத்தின் வரி வருவாய் மற்றும் பொருளாதாரச் செயல்பாடு சீராக இருப்பதையே இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.


0 Comments