Recent Post

6/recent/ticker-posts

ஜாமீன் விதி, சிறை விதிவிலக்கு 'உபா' வழக்குக்கும் பொருந்தும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு / Bail Provisions and Prison Exceptions Apply to UAPA Cases as Well: Supreme Court Verdict

ஜாமீன் விதி, சிறை விதிவிலக்கு 'உபா' வழக்குக்கும் பொருந்தும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு / Bail Provisions and Prison Exceptions Apply to UAPA Cases as Well: Supreme Court Verdict

ஜம்மு காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக சையத் இஃப்திகார் அன்ட்ராபி என்பவர் கைது செய்யப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது.ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, அவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மேலும், அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும், 15 நாட்களுக்கு ஒருமுறை உள்ளூர் காவல் நிலையத்தில் ஆஜராகவும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஜாமீன் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் உபா சட்டத்தின் பிரிவு 43D(5)-ஐ காரணம் காட்டி காலவரையற்ற சிறைவாசத்தை நியாயப்படுத்த முடியாது என்றும், அரசியலமைப்பின் 21 மற்றும் 22வது பிரிவுகளின் கட்டமைப்புக்குள் செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

உபா குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதன் கடுமையான ஜாமீன் விதிகள் தொடர்புடைய வழக்குகளில்கூட விசாரணையில் ஏற்படும் நீண்ட கால தாமதம் மற்றும் விசாரணைக்கு முந்தைய நீண்ட கால சிறைவாசம் ஆகியவற்றை ஜாமீன் வழங்குவதற்கான காரணங்களாக மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த 2021-ல் கே.ஏ. நஜீப் வழக்கில் அங்கீகரித்துள்ளதாக பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.

உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீன் வழங்கப்படாமல் இருக்கும் உமர் காலித் வழக்கு மற்றும் குர்விந்தர் சிங் வழக்குகளில் அவர்களுக்கு ஜாமீன் மறுத்து உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டதை தங்களால் ஏற்றுக்கொள்வது கடினம் என பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு தெரிவித்துள்ளது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பு, இரண்டு நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பை கட்டுப்படுத்தும் என்றும் அவர்கள் கூறினர்.

2020 டெல்லி கலவர சதி வழக்கில் செயற்பாட்டாளர் உமர் காலித்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் ஜாமீன் மறுத்தது. மேலும், அவரது மறு ஆய்வு மனு ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 2020 முதல் சிறையில் இருக்கும் அவருக்கு இந்த தீர்ப்பு, நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel