தெலங்கானாவில், தேசிய நெடுஞ்சாலை என்ஹெச்-63-ன் ஆர்மூர்-ஜக்டியால்-மஞ்சேரியல் பகுதியையும், தேசிய நெடுஞ்சாலை என்ஹெச்-563-ன் ஜக்டியால்-கரீம்நகர் பகுதியையும் 4-வழிப்பாதை தரத்திற்கு விரிவுபடுத்துவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மொத்த நீளம் 190.76 கிலோ மீட்டராகும். இதற்கான செலவு ரூ.7597.16 கோடியாகும்.
ஆர்மூர்-ஜக்டியால்-மஞ்சேரியல் திட்டப் பகுதியானது தெலங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத், ஜக்டியால், மஞ்சேரியல் மாவட்டங்கள் வழியாக அமைகிறது. இச்சாலைப் பகுதியில் அமைந்துள்ள அன்க்சாபூர், கோருட்லா, ஜக்டியால், தர்மபுரி, லக்ஷெட்டிப்பேட்டை, மஞ்சேரியல் ஆகிய இடங்கள் குடியிருப்பு, வணிகப் பகுதிகள் காரணமாக, தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதேபோல், ஜக்டியால்-கரீம்நகர் திட்டப் பகுதியானது ஜக்டியால், போத்தாரம், கங்காதரா கரீம்நகர் போன்ற கடும் போக்குவரத்து நெரிசல், அதிகப்படியான கட்டுமானங்கள் நிறைந்த பகுதிகள் வழியாகச் செல்கிறது.
இத்திட்டங்கள் 4-வழிப்பாதை அமைப்பில் உருவாக்கப்படவுள்ளன. குடியிருப்பு, வணிகப் பகுதிகளைச் சுற்றிச் செல்லும் வகையில் புறவழிச் சாலைகளும் இதில் அமைக்கப்படும். மேலும், கட்டணமில்லா சுங்கச்சாவடியும் அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையிலான சாலை வடிவமைப்பு உறுதி செய்யப்படுவதுடன், தெலங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத், ஜக்டியால், மஞ்சேரியல், கரீம்நகர் ஆகிய மாவட்டங்களில் பயணத் திறனும் மேம்படுத்தப்படும்.

0 Comments