பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், காற்று மாசுவைக் குறைப்பதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறைகளை ஊக்குவிப்பதற்கும், முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு ஆண்டு காலத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான நிதி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தலைநகர் மண்டலத் திட்டமிடல் வாரியம் வாயிலாக வழங்கப்படும்.
மேலும், இத்திட்டம், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஆகியவற்றால் செயல்படுத்தப்படும்.
தில்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்.
மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.5,041 கோடியும், இத்திட்டத்தில் பங்கேற்கும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசத்தின் பங்களிப்பாக ரூ.1,601 கோடி மதிப்பிலான வரிச் சலுகைகள் உட்பட, மொத்தம் ரூ.9,585 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவு செய்யப்பட்டு, பிஎஸ்-IV அல்லது அதற்கு முந்தைய மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும் சரக்கு வாகனங்கள், பேருந்துகளின் உரிமையாளர்களை, பிஎஸ்-VI அல்லது மேலும் கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கக்கூடிய வாகனங்கள் அல்லது மின்சார வாகனங்களாக மாற்றிக்கொள்ள ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துத் தொழில்நுட்பங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்துவதன் மூலம், இத்திட்டம் வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவை கணிசமாகக் குறைத்து, தில்ல, அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காற்றின் தரத்தை மேம்படுத்தப் பெரிதும் உதவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


0 Comments