தமிழ்நாடு மின் வாரிய நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்களுக்காக சென்னை ஐஐடி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் / MoU Signed with IIT Madras for the Development and Future Plans of Tamil Nadu Electricity Board Entities

சென்னை, தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை தொழில்நுட்ப ரீதியாக மேலும் வலுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, மின் சேவைகளின் நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் தரத்தினை உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (IIT Madras) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), ஆகியவற்றுக்கிடையிலான கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தினை தமிழ்நாடு மின்வாரிய தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை ஐ.ஐ.டி.யின் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சியின் தலைவர் மனு சந்தானம் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.

மின்துறையை உலகத் தரத்திற்கேற்ப மாநிலத்தின் நவீனமயமாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் பகிர்மானம் மற்றும் பசுமை எரிசக்தித் துறைகளில் புதிய மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், மின்கட்டமைப்பை மேம்படுத்துதல், செயல்திறனை உயர்த்துதல், செலவினச் சிக்கனத்தை ஏற்படுத்துதல், நிபுணத்துவ தொழில்நுட்ப ஆய்வுகள் (Technical Expert Audits), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை ஊக்குவித்தல், செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (ML), தரவு பகுப்பாய்வு (Data Analytics), டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் தரவுவழி சார்ந்து முடிவெடுத்தல் (Data-driven Decision Making) ஆகியவற்றை நீண்டகால ஒத்துழைப்பிற்கு நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகுக்கிறது.