நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
இதனிடையே சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றைய கூட்டதொடர் தொடங்கியவுடன் தவெக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பொங்கல் பண்டிகை முதல் அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் செயல்படுத்தப்படும். சிலிண்டர் வழங்கும் திட்டம் பொங்கல் பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு வரும். அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். வரும் பொங்கல் பண்டிகை முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும். இதற்காக ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். எரிவாயு சிலிண்டருக்கான விலை நேரடியாக பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆண்டுக்கு 2.50 லட்சம் வரை வருமானம் பெறுவோரின் குடும்பத்தினருக்கு சிலிண்டருக்கு நிதி வழங்கப்படும்.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும். புதிய விமான நிலையம் அமைப்பதற்கு புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2-ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும். முதற்கட்டமாக மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, Deluxe அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணக் கட்டண பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.


0 Comments