இந்தியாவின் 80வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டு பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, நாட்டின் எதிர்கால வளர்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, கல்வி மற்றும் இளைஞர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
விழாவில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேசுகையில், 'நாட்டில் உள்ள 1 கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தில் சிறப்பு பயிற்சி வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக வரும் 1 ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், நாட்டின் சிறந்த ஆசிரியர்களை கொண்டு டிஜிட்டல் முறையில் இலவச ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும்' என்று கூறினார்.
வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கை நிர்ணயித்து, அதற்குத் தேவையான 'சக்தி கி சப்ததாரா' என்ற ஏழு அம்ச தொலைநோக்கு பார்வையை அவர் அறிவித்தார்.
சவால்கள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியிலும் உறுதியான மனதிடத்துடன் பெரிய கனவுகளைக் கண்டு, அதை நனவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்


0 Comments