உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் விவாதமின்றி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்தியத் தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34-லிருந்து, 38-ஆக உயர்த்தப்படவுள்ளது. இந்த திருத்த மசோதாவை ஒன்றிய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவசர சட்டத்திற்கு பதிலாக இந்த புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த நீதித்துறை செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தவும், உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரித்து முடித்து நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறி உள்ளது.
விரைவில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு பின் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.


0 Comments