தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தனி தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் பேரவையில் கொண்டுவந்து பேசினார். தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்ற நடைமுறையும் அமலில் உள்ளது.
இந்நிலையில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2023ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி மாநிலப் பாடல் பாடப்படுவது தொடர்பாக கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1970களிலிருந்தே அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது மரபாகவும், அரசாணைகளின் அடிப்படையிலும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.
முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் விசிக ஆதரவு அளித்தன. இதேபோன்று, தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான அரசினர் தீர்மானத்திற்கு பாமக, இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதையடுத்து, அரசினர் தனித்தீர்மானம் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.


0 Comments